குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.34.85 கோடி மதிப்பில் நிவாரண உதவிகள்: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.34.85 கோடி மதிப்பில் நிவாரண உதவித்தொகைகள்  மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.34.85 கோடி மதிப்பில் நிவாரண உதவித்தொகைகள்  மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது.
  இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவ.29  ஆம் தேதி   ஒக்கி புயலால் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக   விவசாய நிலங்கள், வீடுகள்,  சாலைகள், மின் கம்பங்கள் கடும் சேதம் ஏற்பட்டு, பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மீனவ கிராமங்களான நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை மற்றும் இரயுமன்புத்தன்துறை போன்ற பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. 
  நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை மற்றும் இரயுமன்புத்தன்துறை ஆகிய   பகுதிகளைச்   சேர்ந்த 3161 மீனவர்கள்  கடந்த 29.11.2017  அன்று மீன்பிடித்  தொழிலுக்கு சென்று கரை திரும்பவில்லை.  அதனடிப்படையில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.  சில தீவுகளில் கரை ஒதுங்கிய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக தமிழகம்  அழைத்து வரப்பட்டனர்.
கரை திரும்பாத மீனவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை   அமைக்கப்பட்டு  தேடுதல்   மற்றும்  காப்பாற்றும்   பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக முதல்வர்  கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்திற்கு  உடனடி   நிவாரணமாக தலா  ரூ.2500, வழங்க உத்தரவிட்டார். அதன்படி, உடனடியாக 30, 756 மீனவர்களின்   குடும்பத்திற்கு   தலா  ரூ. 5000  நிவாரணத் தொகை  வழங்கப்பட்டது. மீன்பிடி குறைந்த கால  நிவாரணம் திட்டத்தின் கீழ்  28,643 மீனவ குடும்பங்களுக்கு, தலா ரூ.5  ஆயிரம் வழங்கப்பட்டது. 
மேலும் கடலில் காணாமல் போன 234 மீனவர்களின் குடும்பங்களுக்கு,   சிறப்பு நிவாரணமாக ரூ.5  ஆயிரம்  வங்கி கணக்கில் ஈடு  செய்யப்பட்டது. ஒக்கி புயல் நிவாரணம் மற்றும் மீன்பிடி குறைந்த கால சிறப்பு நிவாரணம் ஆகிய திட்டங்களின்கீழ் மீனவ குடும்பங்களுக்கு மொத்தம்  ரூ.29   கோடியே 81 லட்சத்து ,65 ஆயிரம்  மதிப்பில்  நிவாரணத்   தொகை வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு   குஜராத், கர்நாடகம் , மராட்டியம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளில்  கரை ஒதுங்கிய  மீனவர்களுக்கு தமிழகம் திரும்பி வருவதற்கு  " உணவு "  வசதிக்காக தலா ரூ.2 ஆயிரம்   வழங்கப்பட்டது. 
ஒக்கி புயலினால் மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.20 லட்சம்  வழங்கப்பட்டது
இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலினால்  பெருமளவில் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயத்தினருக்கு இதுவரை ரூ.34.85 கோடி மதிப்பில் நிவாரண உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com