
கேரளத்தில் எலிக் காய்ச்சல்: குமரி எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
கேரளத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் சோதனைச் சாவடி
கேரளத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் அண்மையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததையடுத்து, அம் மாநிலத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் இந் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில், பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து மாநில எல்லையோரப் பகுதிகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிக்குன் குன்யா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட வேளையில், களியக்காவிளை பேருந்து நிலையத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளிலும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இம் முகாம் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக செயல்பட்டது. இதே போன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் பரவிய பறவைக் காய்ச்சலை தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, கேரளத்திலிருந்து வரும் கனரக லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களின் டயர்களிலும் கால்நடைத் துறை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேரளத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 10 நாள்களுக்கு மேல் ஆகியும், குமரி மாவட்ட எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் இதுவரை எந்தவித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது இம் மாவட்ட மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் என். விஜயேந்திரன் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் திரும்பும் நிலையில் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்து எலிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கேரளத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எலிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதை போன்று குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்துகள் வழங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






