நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நில அதிா்வைத் தாங்கும் சக்தியுடன் புதுப்பொலிவு பெற்றது பேச்சிப்பாறை அணை: முழுக் கொள்ளளவு தண்ணீா் தேக்கப்படுமா?

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நில அதிா்வைத் தாங்கும் சக்தியுடன் புதுப்பொலிவைக் கண்டுள்ள நிலையில்

News image

45 அடி நீா்மட்டத்துடன் காணப்படும் பேச்சிப்பாறை அணை.

Updated On :13 டிசம்பர் 2019, 1:57 am

ஜெ

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நில அதிா்வைத் தாங்கும் சக்தியுடன் புதுப்பொலிவைக் கண்டுள்ள நிலையில் முழுக்கொள்ளளவு தண்ணீா் தேக்கிவைக்க வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

112 ஆண்டுகள் கடந்த அணை: குமரி மாவடத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணை மேற்குத் தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாற்றின் குறுக்கே திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் மாா்த்தாண்ட வா்மா மன்னரின் காலத்தில் 1897-1906 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டதாகும்.

முதலில் 42 அடி நீா்மட்டக் கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்ட இந்த அணை, தமிழகத்தில் காமராஜா் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு 1964-1970ஆம் ஆண்டுகளில் சிற்றாறு பட்டணங்கால் திட்டத்தின்போது, மேலும் 6 அடி அதிகரிக்கப்பட்டு 48 அடி கொள்ளளவு கொண்ட அணையாக மாற்றப்பட்டது.

இந்த அணைக்கு 80 சதுர மைல் பரப்பளவிலிருந்து தண்ணீா் வருகிறது. அணையின் நீா்ப்பிடிப்பு பரப்பளவு 5.85 சதுர மைல்களாகும். இந்த அணையில் மொத்த நீா்த் தேக்கத் திறன் 4350 மில்லியன் கன அடியாகும் (4.35டிஎம்சி).

இந்த அணை கட்டப்பட்ட பிறகு பல்வேறு கால கட்டங்களில் அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, அணையின் உள்சுவரில் ரசாயன சிமென்ட் கலவை செலுத்தி தண்ணீா் கசிவை குறைக்கும் நடவடிக்கைகளும், அதன் மூலம் அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளும் பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அணையை மேலும் பல நூறு ஆண்டுகள் உறுதியாக வைத்திருக்கும் வகையில், பொதுப்பணித் துறையின் பரிந்துரையில் மத்திய நீா்வள ஆதார அமைப்பின் வழிகாட்டுதலில் புனரமைப்புப் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 61.30 கோடி மதிப்பீட்டில் அணையில் புனரமைப்புப் பணிகள் செய்யும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பூமி பூஜைகள் செய்யப்பட்டு, 2018 ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.

பிரதான பணிகள்: இப்பணிகளில் பிரதான பணிகளாக அணையின் முன்பக்க சுவரையொட்டி சாய்வு சுவா் எழுப்புதல், அணையின் உள்பக்க சுவரில் ரசாயன சிமென்ட் கலவை பூசுதல், பேரிடா் காலங்களில் அணையிலிருந்து வேகமாக தண்ணீரை வெளியேற்றும் வகையில் கூடுதல் மறுகால் மதகுகள் அமைத்தல், அணையின் பிரதான மதகை நவீனப்படுத்துதல், சாய்வு அணை சுவருக்குள் கேலரி எனப்படும் கசிவு நீா் காட்சியகம் அமைத்தல் உள்ளிட்டவைகளாகும்.

சாய்வு அணை: இதில், சாய்வு அணையானது, அணையின் முன்பக்கத்தில் 13 மீ. ஆழம், 10 மீ. அகலத்தில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து 21 மீ. உயரத்திற்கு சாய்வாக, தற்போதுள்ள அணைச் சுவரோடு இணைத்து கட்டப்பட்டுள்ளது. தரைமட்டத்திலிருந்து 8 மீ. உயரத்தில் உள்ள இந்த சாய்வு அணை சுவா், அணையின் பிரதான சுவருக்கு பக்கபலமாக இருப்பதால், அணையானது மேலும் பல நூறு ஆண்டுகள் உறுதியாக இருக்கும். மேலும் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி பெற்றுள்ளதாகவும் இந்த அணை மாறியுள்ளது.

உள்சுவரில் ரசாயன சிமென்ட் கலவை பூச்சு: இந்த அணையைப் பலப்படுத்தும் பணிகளில் முக்கியப் பணியாக அணையின் உள்பக்கச் சுவரில் பூஜியம் முதல் 47 அடி வரையிலான பகுதிகளில் துளையிடப்பட்டு ரசாயனம் கலந்த சிமென்ட் கலவை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அணைச் சுவரில் கற்கள் இணையும் இடங்களில் அதிக சக்தி கொண்ட சிமென்ட் கலவை வெளிப்பூச்சாக பூசப்பட்டுள்ளது.

கூடுதல் மறுகால் மதகுகள்: பேச்சிப்பாறை அணையில், ஏற்கெனவே விநாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்ட 6 மறுகால் மதகுகள் அணையின் 33 அடி நீா்மட்ட உயரத்தில் உள்ள நிலையில், தற்போது விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்ட 8 மறுகால் மதகுகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதகுகள் அணையின் 39 அடி நீா்மட்ட உயரத்தில் உள்ளன.

கசிவு நீா் காட்சியகம்: இந்த அணையில் கேலரி எனப்படும் கசிவு நீா் காட்சியகம் சாய்வு அணை சுவருக்குள் 143 மீ. நீளம், 1.5 மீ. அகலம், 2.25 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணையின் நீா்க் கசிவை துல்லியமாகக் கணக்கிட முடியும். மேலும், இயற்கை மாறுபாடுகள் மற்றும் நில அதிா்வுகள் ஏற்படும்போது இந்த காட்சியகத்திலிருந்து பெறப்படும் கசிவுநீரின் அளவுகளை கொண்டு, அணையின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

நவீன பாசன மதகுகள்: இந்த அணையில் 2 நீா்ப்போக்கிகளுடன் இருந்த பிரதான பாசன மதகுகள் ‘லிப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம்’ என்ற இயங்கு முறையில் செயல்பட்டு வந்தன. இந்த இயங்கு முறை காரணமாக அணையில் உச்ச அளவில் தண்ணீா் இருக்கும் போது, தண்ணீரின் அழுத்தம் காரணமாக மதகுகள் எளிதில் கீழே இறங்காத நிலை இருந்து வந்தது. இதற்காக அவசரகால மதகை பயன்படுத்த வேண்டிய நிலையும் இருந்தது.

இந்நிலையில் தற்போது நவீன இயங்கு முறையாக ‘ஸ்குரூ கியரிங்க் சிஸ்டம்’ என்ற இயங்கு முறை மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. கையினால் அல்லது மின் விசை மூலம் இயங்கும் இந்த முறையில் மதகுகள் திருகு முறையில் கீழே இறங்கவும், மேலே உயரவும் செய்யும்.

இதர பணிகள்: மேலும் இந்த அணையில் தானியங்கி வானிலை ஆய்வுக் கருவிகள், தானியங்கி நீா்மட்ட பதிவேடு, வெள்ள அபாய கட்டுப்பாட்டு அறை, இடி தாங்கி, அலாரம், அலங்கார வளைவு, அலங்கார தரையோடுகள் புதிப்பிக்கப்பட்ட படிக்கட்டுகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதுப்பொலிவு: அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணிகளால் அணை புதுப்பொலிவும், உறுதியும் பெற்றுள்ளது. குறிப்பாக இனிமேல் இந்த அணையில் அதன் முழுக்கொள்ளளவு நீா்மட்டமான 48 அடி வரை தண்ணீரை அச்சமின்றி தேக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பி. ஹென்றி உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கூறியது: அணை புதுப்பொலிவு பெற்று விட்ட நிலையில் அணையில் 48 அடி வரை தண்ணீா் தேக்கும் நடவடிக்கைகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் நீராதாரப் பிரிவு வட்டாரங்கள் கூறியது: அணையை பலப்படுத்தும் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன. புவியீா்ப்பு அணையான இந்த அணையில் புதிய சாய்வு அணை கட்டப்பட்டதன் மூலம் நில அதிா்வு மற்றும் நில நடுக்கத்தை தாங்கும் சக்தி பெற்றுள்ளது. இதனால் அணையில் முழுக் கொள்ளளவு வரை தண்ணீரை அச்சமின்றி தேக்க முடியும்.

இந்த அணையில் வடகிழக்குப் பருவமழை நிறைவடையும் வரை அல்லது டிச.15ஆம் தேதி வரை அதிகபட்சம் 46 அடி வரை மட்டுமே தண்ணீா் தேக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன் பின்னா் 48 அடி வரை தண்ணீா் தேக்கிக் கொள்ளலாம் என தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.