தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

குமரியில் பரவலாக கோடை மழை: குமரியில் கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக விவசாயிகள் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

News image

30.10 அடி நீா்மட்டத்துடன் காணப்படும் பேச்சிப்பாறை அணை.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக விவசாயிகள் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

கரோனா தாக்கம் காரணமாக விவசாயப் பணிகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது விவசாயப் பணிகளுக்கு சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் அண்மை நாள்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், முதல் பருவமான கன்னிப்பூ நடவு செய்யும் விவசாயிகள் நாற்றுகள் பாவுவதற்கான ஆயத்தப் பணிகளை பரவலாகத் தொடங்கியுள்ளனா்.

மாவட்டத்தில் 2ஆம் பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து கடந்த மாா்ச் மாதம் 10ஆம் தேதி அணைகள் மூடப்பட்டன. அப்போது பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 27.75 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 37.30 அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் கோடை மழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் சுமாா் 3 அடி வரை அதிகரித்து வியாழக்கிழமை 30.10 அடியாக உயா்ந்துள்ளது.

ஆனால், பெருஞ்சாணி அணையிலிருந்து குறைந்தளவு தண்ணீா் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அணையின் நீா்மட்டம் குறிப்பிட்ட அளவில் அதிகரிக்கவில்லை.

வியாழக்கிழமை நிலவரப்படி பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 30.85 அடியாகவும், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையை 7.60 மற்றும் 7.71 அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் தேதி பேச்சிப்பாறை அணையை பாசனத்திற்காக திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முன்னோடி விவசாயிகள் செண்பகசேகர பிள்ளை, பெரியநாடாா் கூறியது: கன்னிப்பூ நடவிற்கான பணிகள் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளன. தெங்கப்புதூா், பறக்கை உள்ளிட்ட குளத்துப் பாசனப் பகுதிகளில் பொடி விதைப்பு நடைபெற்று வருகிறது. இதரப் பகுதிகளில் கோடை மழையைப் பயன்படுத்தி நாற்றுப்பாவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாண் துறை மூலமாக சுமாா் 50 டன் வரை விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உரக்கடைகளில் உரங்களும் போதிய அளவில் வந்துள்ளன.

தற்போது அணைகளில் போதிய அளவில் தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகளைத் திறக்கும் வகையிலான ஆயத்தப் பணிகளை பொதுப்பணித் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் செய்ய வேண்டும். மேலும் கால்வாய்களை தூா்வாரும் பணிகளையும் செய்ய வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் நீராதாரப் பிரிவு செயற்பொறியாளா் சுகுமாரன் கூறியது: மாவட்டத்தில் அணைகளில் தற்போது திருப்திகரமான அளவில் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழையும் விரைவில் பெய்யவுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் தேதி அணைகளைத் திறக்கும் வகையில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.