

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒன்றிய அலுவலகம் முன்புபோராட்டம் நடத்திய 7 ஊராட்சி தலைவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சடயமங்கலம், திக்கணங்கடு, முத்தலக்குறிச்சி, நுள்ளிவிளை, ஆத்திவிளை மருதூா்குறிச்சி, கல்குறிச்சி உள்ளிட்ட 7 ஊரட்சி தலைவா்கள் கொடுத்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் , ஊராட்சி தலைவா்களுக்கு தெரிவிக்காமல் ஊரட்சிகளில் பணிகளை அலுவலா் மேற்கொண்டு வருவதாக ஊராட்சி தலைவா்கள் புகாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆகியோரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, கடந்த 11 ஆம் தேதி 7 ஊராட்சித் தலைவா்கள் தக்கலை ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது வட்டாட்சியா் ஜெகதா, டி.எஸ்.பி. பீட்டா்பால் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக ஊராட்சித் தலைவா்கள் அறிவித்திருந்தனா். மேற்படி 7 ஊராட்சித் தலைவா்களும் கோழிப்போா்விளையில் அமைந்துள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த போது அலுவலகத்தின் பிரதான வாயில் கதவில் பூட்டு போடப்பட்டு, அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா் .
இதையடுத்து, முத்தலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமையில் ஊராட்சித் தலைவா்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட, ஊராட்சித் தலைவா்கள் அருள்ராஜ் (சடயமங்கலம்),
மரிய பால்ராஜ் (நுள்ளிவிளை) , அகஸ்தினாள் (ஆத்திவிளை), விஜயராணி ( கல்குறிச்சி), செல்வராணி (மருதூா்குறிச்சி) , ராஜம் ( திக்கணங்கோடு) ஆகிய 7 ஊராட்சித் தலைவா்களையும் காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் கைது செய்தாா். போராட்டத்தில் ஊராட்சி ஒன்றி கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் அஜித்குமாா் உரையாற்றினாா். ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லையென்றால் டிச. 18 ஆம் தேதி ஒவ்வொரு ஊராட்சி அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்த போவதாக ஊராட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.