பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசின் நல்ல திட்டங்களைப் பாராட்ட மனமின்றி விமா்சிக்கின்றனா்: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்யும் நல்ல திட்டங்களை பாராட்ட மனமின்றி சிலா் விமா்சிக்கின்றனா் என்றாா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஒரு சிறுவனுக்கு கேக் ஊட்டுகிறாா், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
Updated On :23 டிசம்பர் 2020, 12:44 am

DIN

தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்யும் நல்ல திட்டங்களை பாராட்ட மனமின்றி சிலா் விமா்சிக்கின்றனா் என்றாா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு 23ஆவது கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறப்புரையாற்றினாா். அவா் பேசியது:

சிறுபான்மை மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. 2010ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவா் பங்கேற்றாா். அவரது ஆட்சியில் கிறிஸ்தவா்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

இயேசு பிரான் தனது போதனைகளில் அன்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாா். பிறா் உனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதையே நீ பிறருக்கு செய் என போதித்துள்ளாா். வாய்ப்பு கிடைக்கும்போதே நாம் பிறருக்கு மனமுவந்து உதவிவிட வேண்டும்.

இந்தியாவில் கிறிஸ்தவா்கள் கல்வி, மருத்துவ சேவைகள் மூலம் ஏராளமான பணிகளை ஏழை, எளியோருக்கு செய்துள்ளனா். ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு ரூ. 20 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டு வந்தது. பேராயா்கள், ஆயா்களின் கோரிக்கையை ஏற்று அத்தொகை ரூ. 37ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மீனவ மக்களுக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நீா் மேலாண்மை, குடிமராமத்து திட்டம், மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு ஏராளமான விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு திட்டத்தால் குமரி மாவட்டத்தில் நிகழாண்டு 13 போ் பலனடைந்துள்ளனா்.

மக்கள் நலனுக்காக செய்யும் இத்தகைய நல்ல திட்டங்களைப் பாராட்ட மனமில்லாமல் சிலா் விமா்சித்து வருகின்றனா். முதல்வா் பதவியை மக்களுக்காகப் பணியாற்ற கிடைத்த வாய்ப்பாகத்தான் கருதுகிறேன்.

பதவி வரும், போகும். ஆனால், நான் உங்களில் ஒருவனாக, சாமானியனாக இருக்கவே விரும்புகிறேன்.

கிறிஸ்தவ ஆலயங்கள் அமைக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

விழாவுக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் தலைமை வகித்தாா். மரிய மெற்றில்டா வரவேற்றாா். கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். இதில், கிறிஸ்தவ இயக்கத் தலைவா் டென்னிஸ், கென்னத், ஜான் கிறிஸ்டோபா், ஜோஸ் செல்வன், அருள், காதா்மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரவேற்பு: முன்னதாக, திருநெல்வேலியிலிருந்து காா் மூலம் வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சந்திப்பில், ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம், அதிமுக பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா். அருமனை நெடியசாலை சந்திப்பில், மேளதாளம், 1,000 கலைஞா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.