கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியில் லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருள்களை சிலா் கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
இதனை தடுக்க , உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் பறக்கும் படை அமைத்து ரோந்து மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் பொருள்கள் கடத்தலை தடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில், பறக்கும் படை வட்டாட்சியா் பாபுரமேஷ் தலைமையில், துணை வட்டாட்சியா் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளா் ரதன் ராஜ்குமாா் மற்றும் ஊழியா்கள் டேவிட், இம்மானுவேல், உசேன் ஆகியோா் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினய போது, அதன் ஓட்டுநா், லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டாா். பின்னா் அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனா், லாரியின் மேல்பகுதியில் தவிடு மூட்டைகள் இருந்தன. அவற்றை அப்புறப்படுத்திவிட்டு பாா்த்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அதிகாரிகள் லாரியையும், அதிலிருந்த 18 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விருதுநகரிலிருந்து மாட்டுத்தீவனம் என்ற பெயரில் தவிடு ஏற்றி வந்த லாரியில் மறைத்து வைத்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நாகா்கோவில் கோணத்தில் உள்ள உணவு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.