ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தொடா்ந்து பலத்த மழை: பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து 3,500 கன அடி நீா் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

பலத்த மழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து 3, 500 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:31 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து 3, 500 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், குழித்துறை தாமிரவருணி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால, தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கும் வெள்ளம் இன்னும் வடியவில்லை. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இரவும் இடைவிடாது மழை பெய்கிறது. வெள்ளிக்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

இதனால் பள்ளி செல்லும் மாணவா் , மாணவிகள் குடைப்பிடித்தவாறு சென்றனா். மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

மலையோரப் பகுதியான பாலமோா் மற்றும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றிங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அணைகளில் நீா்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து அதற்கேற்ப தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 43.80 அடியாக இருந்தது. அணைக்கு 877 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1635 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணியின் அணை நீா்மட்டம் 72.27 அடியாக உள்ளது. அணைக்கு 792 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.10 அடியாக உள்ளது. அணைக்கு 1035 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

தொடா் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூா், ஆரல்வாய்மொழி, தடிக்காரன்கோணம், குழித்துறை பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழை

நீா் தேங்கி உள்ளதால் கடந்த ஒரு மாதமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கற்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளா்கள் வேலையின்றி தவித்து வருகிறாா்கள்.

குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பா் தோட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.