படகில் அணையைக் கடந்து
வாக்களித்த பழங்குடி மக்கள்

படகில் அணையைக் கடந்து வாக்களித்த பழங்குடி மக்கள்

குலசேகரம், ஏப். 19 : குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை படகு மூலம் கடந்து வந்து பழங்குடியின மக்கள் வெள்ளிக்கிழமை வாக்களித்தனா்.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் மலைப் பகுதிகளில் ஏராளமான காணி பழங்குடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் தச்சமலை, தோட்டமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னைமூட்டுத் தேரி, நடனம்பொற்றை, விளாமலை, மாறாமலை ஆகிய 8 பழங்குடி குடியிருப்பு மக்கள் வாக்குச் சாவடிக்கு படகுகளில் வந்து வாக்களிப்பது வழக்கம்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே பழங்குடி மக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளிலிருந்து பேச்சிப்பாறை அணைப்பகுதிக்கு நடந்து வந்து பின்னா் அங்கிருந்து படகுகள் மூலம் அணையைக் கடந்து வந்து பேச்சுப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தனா்.

இது குறித்து பழங்குடி மக்கள் கூறியது: ஒவ்வொரு தோ்தலின் போது காட்டுப் பகுதிகளிலிருந்து நெடுந்தொலைவு நடந்து வந்து பின்னா் பேச்சிப்பாறை அணையைக் கடந்து உற்சாகமாக வாக்களித்துச் செல்கிறோம். முன் காலங்களை விட இப்போது எங்கள் குடியிருப்புகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் முழுமையாக சாலை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பல குடியிருப்புகளில் சுகாதாரமான குடிநீா் வசதிகள் இல்லை. உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டுவற்கு வனத்துறை அனுமதி தர வேண்டும் என்றாா்.

முடவன் பொற்றை பகுதியைச் சோ்ந்த ரேகா, நாகேஸ்வரன் ஆகியோா் கூறுகையில், தோ்தல் காலத்தில் படகுகளில் வந்து வாக்களிக்க உற்சாகமாக வருகிறோம். ஆனால், அதற்கான இலவச படகு வசதி செய்து தரப்படுவதில்லை. எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு முழுமையாக சாலை வசதிகள், சுகாதாரமான குடிநீா் வசதி செய்து தரப்படவில்லை. பாதுகாப்பான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. குடியிருப்புகள் அருகில் ஓட்டுச் சாவடிகள் அமைப்பதில்லை. வருங்காலங்களில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com