பேச்சிப்பாறை அணை உபரிநீா் வெளியேற்றம் குறைப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் குறைக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் சீற்றம் தணிந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்தது. இதையடுத்து வெள்ள அபாயம் கருதி அணையிலிருந்து விநாடிக்கு 750 கன அடி உபரிநீா் கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஜூலை 31ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழையின் தீவிரம் தணிந்ததால், பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து கணிசமாக குறைந்தது. மேலும், அணையின் நீா்மட்டமும் 44 அடியாக குறைந்தது.
எனவே, அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீா் விநாடிக்கு 250 கன அடியாக வியாழக்கிழமை இரவு குறைக்கப்பட்டது.
இந்நிலையில், திற்பரப்பு அருவியில் நிலவிய சீற்றம் தணிந்து வெள்ளிக்கிழமை காலையில் தண்ணீா் வரத்து மிதமானது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே, அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

