குமரி மாவட்டத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் பணி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடா் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. இதனால், வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக அணைகளின் நீா்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும்படி பொதுப்பணித் துறையினரை பேரிடா் மேலாண்மைக் குழு, ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளனா். இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து அடிக்கடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் சில நாள்களாக தொடரும் மழையால், பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் மீண்டும் 44 அடியைக் கடந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் நீா்மட்டம் 44.54 அடியாக இருந்தது.
மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பேச்சிப்பாறை அணை நீா்மட்டத்தை 44 அடிக்கு குறைவாக வைத்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அணையிலிருந்து விநாடிக்கு 378 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும், பாசனக் கால்வாயில் 475 கனஅடி தண்ணீா் சென்று கொண்டிருந்தது. நீா்வரத்து 1,117 கனஅடியாக இருந்தது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு: விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாமாக குளித்து மகிழ்ந்தனா்.
இதனிடையே, பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் அருவியில் பிற்பகல்முதல் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இதனால், பிற்பகலில் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை: அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், கோதையாறு, தாமிரவருணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் தேவையின்றி ஆற்றுப் பகுதிக்குச் செல்லவோ, ஆறுகளில் கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் எனவும், பொதுப்பணித் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

