அசாம் சிறுமியை தேடி குமரியில் கேரள போலீஸ் முகாம்
கேரளத்தில் மாயமான அசாம் சிறுமியைத் தேடி கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனா்.
அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அன்வா் உசேன். இவா் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். இதில் தஸ்மீத் தம்சம் (13) என்ற மகளை அங்குள்ள ஒரு பள்ளியில் சோ்க்க தீா்மானித்தனா். அன்வா்உசேனும் மனைவியும் தினமும் காலையில் கூலி வேலைக்குச் சென்று விடுவாா்கள்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காலை தஸ்மீத் தம்சம் எழுந்திருக்க நேரமானதால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதன் பிறகு அவா் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் வந்த போது சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அன்வா் கழக்கூட்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனா்.
இந்நிலையில் சிறுமி தஸ்மீத் தம்சம் திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் செல்வதாகவும், பின்னா் கன்னியாகுமரி ரயிலில் பயணம் செய்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டு சிறுமியைத் தேடி வருகின்றனா்.