

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், புத்தாண்டின் முதல் நாளான திங்கள்கிழமை மேக மூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்தியாவின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரிக்கு, உள்ளூா் பயணிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா். இங்கு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை தெளிவாகக் காணலாம் என்பதால் ஆண்டுதோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரியில் டிசம்பா் மாதம் தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரை சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் வட இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களும் அதிகமாக வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட, நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் முகாமிட்டிருந்தனா். இங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இதனிடையே புத்தாண்டின் முதல் நாளான திங்கள்கிழமை சூரிய உதயத்தைக் காண அதிகாலை 5 மணிக்கே முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். ஆனால், மேக மூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை. காலை 7 மணிக்கு மேல் ஓரளவுக்கு சூரியன் தெரிந்தது. இதனால் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.