முட்டம் கடற்கரையில் 
வாக்காளா் விழிப்புணா்வு மணல் சிற்பம்

முட்டம் கடற்கரையில் வாக்காளா் விழிப்புணா்வு மணல் சிற்பம்

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளா் விழிப்புணா்வு மணல் சிற்பத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவை பொதுத்தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் 18 வயது நிரம்பியா்வா்கள் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிப்பேன் என்ற தோ்தல் ஆணையத்தின் மையக் கருத்தை வலியுறுத்தி, சுற்றுலாத் தலமான முட்டம் கடற்கரையில் சிறந்த கலை வல்லுநா்களை கொண்டு கடல் மணலால் வாக்காளா் விழிப்புணா்வு மணல்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை கவரும் வண்ணம் உள்ளது. மேலும் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் இதுபோன்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நாளன்று வாக்குரிமை பெற்றஅனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாபு, முட்டம் ஊராட்சித் தலைவா் நிா்மலாராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com