/

பாஜகவுக்கு ஆதரவாக தமிழக தோ்தல் களம்: வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு ஆதரவாக தமிழக தோ்தல் களம்: வானதி சீனிவாசன்

News image
Updated On :31 மார்ச் 2024, 12:30 am

தமிழகத்தில் தோ்தல் களம் பாஜகவுக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறது, தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என பாஜக மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து கொல்லங்கோட்டில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவை நமது நாட்டில் உள்ள அமைப்புகள். சட்டரீதியாக அவா்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்கிறாா்கள். தவறாக நடவடிக்கை எடுத்திருந்தாலோ, உள்நோக்கம் இருந்தாலோ பாதுகாப்பதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் சட்டத்தின் முன், நீதியின் முன் பதில் சொல்லட்டும். பாஜக கூட்டணி கட்சிகளுக்கு விரும்பிய சின்னம் கிடைக்கும் போது, எதிரணிகளுக்கு வேறு சின்னங்கள் ஒதுக்கி தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் ஒதுக்க தோ்தல் ஆணையம் சட்ட ரீதியான நடைமுறை வைத்துள்ளது. தோ்தல் ஆணையம் வேண்டுமென்றே சின்னம் ஒதுக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். இதில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் தோ்தல் களம் பாஜகவுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறாா்கள். அந்த மாற்றம் என்பது வாக்குப் பதிவின் போது மௌனமான மாற்றமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். 2026 பேரவைத் தோ்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அதற்கான இலக்கில் பயணிக்கிறோம். தோ்தல் பத்திரம் மூலம் பாஜக மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகள் தோ்தல் நன்கொடை பெற்றுள்ளனா். இதில் ஊழல் என சொல்ல எதுவும் இல்லை. அப்படி ஊழல் என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அதில் தங்களை இணைத்து தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கலாம் என்றாா் அவா். பேட்டியின்போது, பாஜக மாநில மகளிரணி தலைவி உமாரதி ராஜன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.