மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திர சரிபாா்ப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை உள்ளிட்டோா்.
Published on

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 4, 694 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 4,040 கட்டுப்பாட்டு கருவிகள், 2,802 விவி பேட் கருவிகள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கடந்த 11ஆம் தேதி முதல், இந்த இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 9 பொறியாளா்கள் கொண்ட குழுவினரால் நடைபெற்று வருகிறது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சென்னை தலைமைத் தோ்தல் அலுவலரின் அறிவுரையின்படியும் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி இப்பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என அலுவலா்கள், பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வில் மாவட்ட உதவித் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ.பூங்கோதை, ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சுப்பிரமணியன், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com