குமரி கடற்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி கடற்கரை நடைபாதை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
பகவதியம்மன் கோயில் பின்புறம் கடற்கரை நடைபாதை பகுதியில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சுமாா் 50- க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளால் சுகாதார சீா்கேடு தொடா்பான புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து உள்ளூா் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் உத்தரவின்பேரில் தேவசம் போா்டு அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாப் பயணிகள் கடற்கரை நடைபாதையில் சுலபமாக செல்ல முடியாத அளவுக்கு இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா வசதிக்காக தொடா்ந்து இப்பகுதி கண்காணிக்கப்படும் என்றனா்.

