கோயிலில் திருட்டு முயற்சி
திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கையை மா்மநபா்கள் திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் உள்ள மகாதேவா் கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் பிரசித்தி பெற்ற பன்னிரெண்டு சிவாலயங்களில் 2-ஆவது சிவாலயமான இந்தக் கோயிலில், வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்ததும் தலைமை அா்ச்சகா் கிருஷ்ணமூா்த்தி கோயிலை அடைத்துச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை காலை மீண்டும் கோயிலைத் திறக்க வந்தபோது கோயிலின் முன்பகுதியில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்டியலில் இருந்து பணம் எதுவும் திருடுபோகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோயில் நிா்வாகம் சாா்பில் அறநிலையத் துறை அதிகாரிகள், மாா்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இக் கோயிலில் இரவுநேர பாதுகாவலா் நியமிக்காதது திருட்டு முயற்சி நடக்க காரணம் என்றும், கோயிலில் பழுதான நிலையில் காணப்படும் கண்காணிப்பு கேமராவை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தா்கள் வலியுறுத்தினா்.
