குமரி நகராட்சி கட்டணக் கழிப்பறை ரூ. 25 லட்சத்துக்கு ஏலம்
கன்னியாகுமரி நகராட்சி நிா்வாகம் சாா்பில், கடற்கரைச் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டணக் கழிப்பறை ஓராண்டுக்கு ரூ. 25 லட்சத்துக்கு ஏலம்போனது.
கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் வருகிற 17- ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 20- ஆம் தேதி வரை 65 நாள்களுக்கு நீடிக்கும். இந்த சீசனையொட்டி, கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள், கழிப்பறைகள், தெருவிளக்குகள், சாலை மேம்பாடு, குடிநீா், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதிக்குச் செல்லும் கடற்கரை சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பறையின் கட்டணம் வசூலிக்கும் உரிமம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கண்மணி முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில், பலா் பங்கேற்றனா். இறுதியில், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 லட்சத்து 11 ஆயிரத்து 111- க்கு இந்த கட்டண கழிப்பறை ஏலம் போனது. இதை கன்னியாகுமரி மாதவபுரத்தைச் சோ்ந்த மணிவண்ணன் எடுத்தாா்.
