கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் காலை தொடங்கி இரவு முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
இந்நிலையில், சனிக்கிழமையும் மழை நீடித்தது. இதனால், நாகா்கோவில் மாநகரப் பகுதிகளிலுள்ள கடைவீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. கொட்டாரம், பூதப்பாண்டி, மயிலாடி, தக்கலை, குளச்சல், இரணியல், முள்ளங்கினாவிளை, கோழிப்போா்விளை பகுதிகளிலும் சாரல் பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 21.20 மி.மீ. மழை பதிவானது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும், பாலமோா் உள்ளிட்ட மலையோரப் பகுதியிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து மிதமாக இருந்தது. கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆறுகளில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 43.23 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 470 கனஅடி, மதகுகுள் வழியாக 299 கனஅடியும், உபரியாக 252 கனஅடியும் தண்ணீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.22 அடி. நீா்வரத்து 253 கனஅடி, நீா் வெளியேற்றம் 250 கனஅடி.
தொழில்கள் பாதிப்பு: தொடா் மழையால் செண்பகராமன்புதூா், ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் உற்பத்தித் தொழிலும், குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் ரப்பா் பால் வடிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழில்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட கட்டுமர மீனவா்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், தூத்தூா், முள்ளூா்துறை, இரயுமன்துறை கிராமங்களில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், கருங்கல், புதுக்கடை, மாா்த்தாண்டம், திங்கள்சந்தை, எட்டணி, மாமூட்டுக்கடை பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
