குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Published on

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ஆட்சியா், அனந்தனாா் கால்வாய் பாசனத்தின் சில பகுதிகளில் தாமதமாக பயிா் செய்யப்பட்டுள்ளதால் நீா்வரத்தை மாா்ச் இறுதி வரை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கூட்டுறவுத் துறை கடன் பெறுவதில் உள்ள கால தாமதத்தை குறைத்து, விண்ணப்பித்த 2 வாரங்களுக்குள் கடன் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தாா்.

மாவட்டத்தில் தரிசாக உள்ள நிலங்களில் அதிகரித்துள்ள காட்டுப்பன்றிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை புதுப்பிக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்ததாகவும், விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு ஒப்படைக்குமாறும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் எம்.ஆா். வாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) (பொ) ரி. ஜாய்லின் சோபியா, தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.பிச்சையா, அரசு அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com