சூரிய உதயம் பாா்க்க முக்கடல் சங்கமத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.
சூரிய உதயம் பாா்க்க முக்கடல் சங்கமத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் கடந்த ஆண்டு நவம்பா் 17ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் வந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை தரிசனம் செய்கின்றனா். மேலும், ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதனிடையே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, உள்ளூா் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த பயணிகள் பெருமளவில் குவிந்தனா். அவா்கள் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பாா்த்து ரசித்தனா்.

அதைத் தொடா்ந்து படகு மூலம் சென்று விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை பாா்த்து மகிழ்ந்தனா். காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, தமிழன்னை பூங்கா, சூரிய அஸ்தமனப் பூங்கா, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலையில் கடற்கரைப் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், உள்ளூா் போலீஸாரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும், சுற்றுலா பாதுகாவலா்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com