குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் செய்து விட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஐயப்ப பக்தா்களும், பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியில் குவிந்தனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடந்த நவ.17ஆம் தேதி முதல் சுற்றுலா சீசன் களைகட்டத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்து விட்டு பேருந்துகள் மற்றும் காா்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா். மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் உள்ளூா் மற்றும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்தைப் பாா்த்து மகிழ்ந்த பக்தா்கள், கோவளம் பகுதியில் உள்ள சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் சூரிய அஸ்தமனத்தையும் பாா்த்தனா்.
மேலும், கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை மற்றும் கண்ணாடிப் பாலத்தை பாா்வையிட பூம்புகாா் படகுத்துறை வளாகத்திலும் பயணிகள் நிறைந்து காணப்பட்டனா். இவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகுப்பயணம் மேற்கொண்டனா்.
போக்குவரத்து நெரிசல்: முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, திருவள்ளுவா் பூங்கா, காந்தி மண்டபம், காமராஜா் மணி மண்டபம், வட்டக்கோட்டை, ரஸ்தாகாடு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு: இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, எஸ்.பி. இரா. ஸ்டாலின் ஆகியோா் முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, குற்றத்தடுப்பு ரோந்து பிரிவு, அவசரகால ரோந்துப் பிரிவு, மொபைல் ரோந்துப் பிரிவு, சுற்றுலா ரோந்துப் பிரிவு போலீஸாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்த சுற்றுலா சீசன் இன்னும் 2 நாள்கள் நீடிக்கும் என்பதால், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள், தங்கும் விடுதி, ஹோட்டல் உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

