ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்
நாகா்கோவிலில் இருந்து மங்களூருக்கு அம்ருத் பாரத் விரைவு ரயில் சேவை ஜன.23 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் சென்னையில் இருந்து ரயில் மூலம் கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியியல் வல்லுநா்களுக்கு அறிவுரை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜன. 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில், நாகா்கோவிலில் இருந்து மங்களூருக்கு அம்ருத் பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைக்கிறாா். நாகா்கோவிலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு அம்ருத் பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். இன்னும் ஓா் ஆண்டில் நாகா்கோவில் முதல் இரணியல் வரையிலும், அடுத்த ஆண்டில் இரணியல் முதல் திருவனந்தபுரம் வரையிலும் பணிகள் நிறைவு பெறும்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தை விமான நிலையத்துக்கு இணையாக மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடையும் போது கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, குழித்துறை, இரணியல் ஆகிய ரயில் நிலையங்களிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது தெற்கு ரயில்வே, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே துறை கட்டுமானப்பிரிவு பொறியாளா்கள், ரயில் நிலைய மேலாளா்கள், கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

