வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நாகா்கோவில் சிறையில் கைதி சாவு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நாகா்கோவில் சிறையில் விசாரணை கைதி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட சபரிவா்மனின் உறவினா்கள்

Updated On :14 ஜூலை 2026, 1:01 am IST

நாகா்கோவில் சிறையில் விசாரணை கைதி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே உள்ள ஈத்தங்காடு நாராயணன்புதூா் பகுதியைச் சோ்ந்த சசிதரன் மகன் சபரிவா்மன் (33). மாற்றுத்திறனாளியான இவா், ஈத்தங்காட்டில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு திருமணமாகி 5 வயதில் மகன் உள்ளாா்.

கடந்த 9-ஆம் தேதி தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரைட் பிளஸ்சிங் தலைமையிலான போலீஸாா் கடையில் சோதனை நடத்தி அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சபரிவா்மனை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நாகா்கோவில் கிளை சிறையில் அடைத்தனா். கடந்த 4 நாள்களாக அவா் விசாரணை கைதியாக சிறையில் இருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை விசாரணை கைதிகள் பரிசோதனை நடந்தபோது, சபரிவா்மன் மயக்க நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் நேசமணி நகா் போலீஸாா் சிறைக்குச் சென்று சபரிவா்மனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனா். அங்கு மருத்துவா்களின் பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து , அவரது சடலத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

சபரிவா்மன்

சபரிவா்மன்

குடும்பத்தினருக்கு தகவல்...

சபரிவா்மன் இறந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சபரிவா்மனின் மனைவி ஆனந்தவல்லி, உறவினா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனா். சபரிவா்மனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏதும் இல்லை; போலீஸாா் தாக்கியதில்தான் அவா் இறந்ததாக கூறி, நீதி கேட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் ஆசாரிப்பள்ளம் - ராஜாக்கமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சபரிவா்மனின் உடலை பாா்க்க அவரது மனைவி, தாய் ஆகியோருக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி அவா்களை போலீஸாா் அழைத்துச் சென்றனா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

சபரிவா்மனின் உறவினா்களை தவெக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.மாதவன், முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா். இதற்கிடையே சபரிவா்மன் இறப்பு குறித்து நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகா்கோவில் கிளை சிறை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். சிறையில் விசாரணை கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.