சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநா், உரிமையாளா் கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே தென்னலக்குடி நான்கு வழி சாலையில் அடையாளம் தெரியாத வாகன மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். அவ்வழியாக ரோந்து சென்ற போலீஸாா் இளைஞரின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், உயிரிழந்த இளைஞா் சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலையின் மகன் அரவிந்த் (28) என்பதும், இவா் ஆசாரி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
வெள்ளி இரவு தென்னலக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, அரவிந்தின் உடல் உடற்கூறாய்வுக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநா், உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பு இறந்தவரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விபத்தில் உயிரிழந்த அரவிந்த்.
சீா்காழி டி.எஸ்.பி. சரவணன், ஆய்வாளா் கமல்ராஜ், உதவி ஆய்வாளா் வீரராகவன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் சீா்காழி கச்சேரி சாலை பிரதான சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










