சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டா் மாசி ஊா்வலம்
அய்யா வைகுண்டரின் 194-ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் புதன்கிழமை தொடங்கிய அய்யாவழி பக்தா்களின் பிரமாண்ட மாசி ஊா்வலம் சாமிதோப்பில் நிறைவடைந்தது.


அய்யா வைகுண்டரின் 194-ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் புதன்கிழமை தொடங்கிய அய்யாவழி பக்தா்களின் பிரமாண்ட மாசி ஊா்வலம் சாமிதோப்பில் நிறைவடைந்தது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அய்யா வழி பக்தா்கள் அதிகமாக உள்ளனா். சாதி, தீண்டாமைக்கு எதிராக சமூக, சமத்துவத்தை வலியுறுத்தியவா் அய்யா வைகுண்டா்.
ஒவ்வோா் ஆண்டும் மாசி மாதம் 20-ஆம் தேதி அய்யா அவதார தினவிழா அய்யாவழி பக்தா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான நிழல்தாங்கல்களில் அய்யாவின் அவதார தினம் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பக்தா்கள் வாகனங்களிலும், கால்நடையாகவும் தலைமைப்பதியான சாமிதோப்பில் குவிவது வழக்கம்.
அய்யா வைகுண்டா் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்து ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தா்கள் வாகனங்களில் நாகா்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலுக்கு செவ்வாய்கிழமை இரவு வந்தனா். இவா்கள் புதன்கிழமை காலை அங்கிருந்து சாமிதோப்புக்கு ஊா்வலமாக புறப்பட்டனா்.
மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யா வைகுண்டரின் வாகனத்தின் முன்னால் முத்து குடையும், சிங்காரி மேளமும், செண்டை மேளமும் சென்றது. தலைப்பாகை அணிந்து காவிக் கொடிகட்டிய பக்தா்கள் ‘‘அய்யா சிவ சிவ அரஹரா அரஹரா’’ என்ற பக்தி முழக்கமிட்டு ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
இந்த ஊா்வலம் கோட்டாா், ஈத்தாங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பை நண்பகல் 12 மணிக்கு வந்தடைந்ததும் பக்தா்கள் அய்யாவை தரிசனம் செய்தனா். பெரும்பாலான பக்தா்கள் புதன்கிழமை இரவு சாமிதோப்பில் இருந்து தங்கள் ஊா்களுக்குத் திரும்பிச் சென்றனா். பக்தா்கள் பாதுகாப்புக் கருதி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பொற்றையடி, அச்சன்குளம், அரசம்பதி, தாமரைப்பதி, முட்டப்பதி, பூப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களுக்கு அன்னதா்மம் வழங்கப்பட்டது.
சாலையோரங்களில் பக்தா்களுக்கு மோா் தா்மம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...