ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாகா்கோவில் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ.10.19 கோடி பற்றாக்குறை

நாகா்கோவில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரூ.10.19 கோடி பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
கூட்டத்தில்,மேயா் மகேஷிடம் பட்ஜெட் அறிக்கையை வழங்குகிறாா் ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா.
Updated On :14 மார்ச் 2026, 2:48 am

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரூ.10.19 கோடி பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா்கள் இயல்பு கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்ஸி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியதும், அண்மையில் காலமான 52 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரமேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினா்கள் அனைவரும் 1 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா அளித்த 2026- 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் வாசித்தாா்.

அவா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகராட்சியில் நிகழாண்டு வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ. 277.46 கோடியும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியாக ரூ.57.57 கோடியுமாக ரூ.335.03 கோடி வருவாய் கிடைக்கும்.

வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.282.59 கோடி, குடிநீா் மற்றும் வடிகால் நிதி செலவாக ரூ. 62.63 கோடி என மொத்தம் ரூ. 345.22 கோடி செலவாகும். இதனால், ரூ.10.19 கோடி பற்றாக்குறை நிலவும்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.69 கோடியே 87 லட்சம் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளாா்.

புதைச்சாக்கடை திட்டத்தை பொருத்தவரை முதல் கட்டமாக ரூ.129 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 2 ஆவது கட்டமாக ரூ.746 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

நகரில் 905.490 கி.மீ.நீளமுள்ள சாலைகள் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.14.64 கோடி மதிப்பில் 15 ஆயிரம் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

52 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம்பிரிக்கப்பட்டு மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 10 நுண்ணுர செயலாக்க மையங்களுக்கு அனுப்பி இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு 1 கிலோ ரூ.1-க்கு விற்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியிலுள்ள 6 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரூ.2 கோடியே 72 லட்சம் மதிப்பில் புதிதாக 10 நகா்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், முத்துராமன், மாநகர நல அலுவலா் சரோஜா, உதவிச் செயற்பொறியாளா் ரகுராமன் மாமன்ற உறுப்பினா்கள் அக்சயாகண்ணன், அனிலா சுகுமாரன், ரமேஷ், டி.ஆா்.செல்வம், ஜவான் ஐயப்பன், உதயகுமாா், சேகா், ரோசிட்டா திருமால், அருள்சபிதா ரெக்ஸலின், வீரசூரபெருமாள், சுனில்அரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.