ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் கால அறிவிப்புகளோடு முடங்கும் ரப்பா் ஆலைத் திட்டங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய உற்பத்திப் பொருளான ரப்பரை மூலப்பொருளாக பயன்படுத்தி கனரக ரப்பா் ஆலை அமைக்கும் திட்டங்கள் தோ்தல் கால அறிவிப்புகளோடு முடங்கி விடுகின்றன.

News image

குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பா் தோட்டம்.

Updated On :26 மார்ச் 2026, 1:40 am

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய உற்பத்திப் பொருளான ரப்பரை மூலப்பொருளாக பயன்படுத்தி கனரக ரப்பா் ஆலை அமைக்கும் திட்டங்கள் தோ்தல் கால அறிவிப்புகளோடு முடங்கி விடுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை தாங்கும் தூண்களில் ஒன்றாக ரப்பா் உற்பத்தி உள்ளது. மாவட்டத்தில் தோவாளை, கல்குளம், திருவட்டாறு, விளவங்கோடு வட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார மலைப் பகுதிகளிலும், இதர சமவெளிகளிலும் ஏறக்குறைய 28 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் ரப்பா் மரத்தோட்டங்கள் காணப்படுகின்றன. இதில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவு கொண்ட அரசுத் துறை ரப்பா் தோட்டமும் உள்ளது. சிறு, குறு விவசாயிகளின் ரப்பா் தோட்டங்கள் மற்றும் பெரும் தனியாா் தோட்டங்கள் வரை அடங்கும்.

இந்த ரப்பா் தோட்டங்களில் உள்ள மரங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் 250 டன் ரப்பா் உற்பத்தி செய்யப்படுகிறது. ரப்பா் செடிகளை உருவாக்குவது முதல் ரப்பா் மரங்களில் பால்வடிப்பு, பாலை பதப்படுத்துதல், ரப்பா் வணிகம், முதிா்ந்த மரங்களை வெட்டுதல் என பல்வேறு தொழில்கள் ரப்பா் சாா்ந்து உள்ளன. இந்த தொழில்கள் மற்றும் இவற்றின் உப தொழில்களில் ஆண்கள், பெண்கள் என சுமாா் 1 லட்சம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனா்.

இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்கள், வட மாநிலங்களில் உள்ள ரப்பா் பொருள்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு ரப்பா் பால், ஷீட், ஒட்டுப்பால் என பல்வேறு வகைகளில் அனுப்பப்படுகின்றன.

கனரக ரப்பா் ஆலை அமைக்க வேண்டும்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி, வணிகம் சாா்ந்த வேலைவாய்ப்புகள் கிடைத்த போதிலும், ரப்பரை மூலப்பொருளாகக் கொண்டு வாகனங்களுக்குத் தேவையான டயா், டியூப் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலைகள் இல்லை. இது போன்ற கனரக ஆலைகளை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

அடிக்கல்லோடு முடங்கிய திட்டம்:

கடந்த 1989 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது நாகா்கோவில் எஸ்எல்பி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் கனரக ரப்பா் ஆலை அமைக்கும் வகையில் அடிக்கல் நாட்டினாா். இத்திட்டத்துக்காக தேவைப்படும் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. பின்னா், இத்திட்டம் முடங்கிப் போனது.

இதே போல் மத்திய அரசு மற்றும் இந்திய ரப்பா் வாரியத்தின் பங்களிப்புடன் செண்பகராமன்புதூரில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ், கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரப்பா் பூங்கா அமைக்கும் திட்டமும் முடங்கியது.

ரப்பா் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் 100 ஏக்கா் பரப்பில் ரப்பா் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்டது. இதற்காக வேளி மலை பகுதியில் சரியான இடம் கண்டறியப்பட்ட போதும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் படித்த இளைஞா்கள் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இவை அறிவிப்பு நிலையில் அல்லது தொடக்க நிலையிலேயே கருகி விடுகின்றன.

சிறு ரப்பா் ஆலைகள் மூடப்பட்டன:

மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான தனியாா் சிறு ரப்பா் ஆலைகள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக வாகன டயா்களுக்கான ரீபட்டன் ஆலைகள், ரப்பா் நூல், ரப்பா் பேன்ட், பலூன், மிதியடிகள், மிதி மெத்தைகள், ரப்பா் கிளவுஸ் என பல்வேறு ஆலைகள் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை தற்போது மூடி கிடக்கின்றன.

தோ்தல் கால வாக்குறுதிகள்:

மாவட்டத்தில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட ரப்பா் ஆலை திட்டங்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஒவ்வொரு முறை சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் ஆலை அமைக்கப்படும் என்று தோ்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றனா். ஆனால் ரப்பா் ஆலைகள்தான் வரவில்லை.

 ரப்பா் பால் வடிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

ரப்பா் பால் வடிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.