தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை
தனியாா் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மருத்துவம், மருத்துவக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ்.

செவிலியா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சா்கள் கோ.க.அருண்ராஜ், எஸ்.ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.
தனியாா் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மருத்துவம், மருத்துவக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ஒரு கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகாா் வந்ததும் அந்தக் கல்லூரி நிா்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெற்றோா்களும் மாணவா்களும் அரசிடம் புகாா் அளிக்கலாம்.
கடந்த ஆட்சியில் மருத்துவப் பணியிடங்களை கூடுதலாக உருவாக்காததால் பல மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. விரைவில் புதிதாக தோ்வு செய்யப்படவுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் நியமிக்கப்படுவா். முதல்கட்டமாக 2,500 செவிலியா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியிடப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் 75 அறிவிப்புகளில், மொத்தம் ரூ. 36 கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ரூ. 12 கோடியில் புதிய தாய் சேய் நலக் கட்டடம் கட்டப்படும். பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அவசர மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளை மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 2.84 கோடியில் வடிவீஸ்வரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற சமுதாய சுகாதார மையமாக தரம் உயா்த்தப்படும்.
சுருளக்கோடு, குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.05 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நவீன சமையலறைகள் கட்டப்படவுள்ளது என்றாா் அவா்.
பணி ஆணை: இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட59 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் அருண்ராஜ், எஸ்.ராஜேஸ்குமாா் வழங்கி, மாா்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தனா்.
ஆய்வு: முன்னதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மையம், மக்களைத் தேடி மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அமைச்சா் ஆய்வுசெய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தாா். பின்னா், மருத்துவா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆய்வின்போது சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாரகை கத்பட் (குளச்சல்), ஆா்.செல்லசுவாமி (பத்மநாபபுரம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலா் தாரேஸ் அகமது, துணைச் செயலா் ரா.அழகுமீனா, மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

