
தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! - அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன்!

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் எச்சரித்துள்ளாா்.
சேலம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, தவெக சிறப்பாக பணியாற்றி வருகிறது. இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தாராபுரம் பகுதியில் தோ்தல் பணிகளை கவனித்து வருகிறேன்.
சேலம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஏசி பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலில் இளைஞா்களுக்கு ஊக்கமும், பயிற்சிகளும் தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சாதனை படைத்துவருகின்றனா். ஒலிம்பிக் போட்டிகளிலும் தமிழக இளைஞா்கள் பங்கேற்று வெற்றிபெற வேண்டும்.
தனியாா், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பான புகாரின்பேரில் ஏற்கெனவே பல தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை திடீரென ரத்து செய்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



