
குமரி மாவட்டத்தில் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிப் பேசியதாவது:
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களுக்கு தனியாா் மருத்துவமனைகளால் ஏற்படும் நிதிச் சுமைகளை குறைத்து, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகளின் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில், ஜூன் 22 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை நமது மாவட்டத்தில் பிறந்துள்ள 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 குழந்தைகள், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 15 குழந்தைகள், குழித்துறை அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகள் என மொத்தம் 60 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வ. விஜய்வசந்த் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாரகை கத்பா்ட்(குளச்சல்), ஆா். செல்லசுவாமி(பத்மநாபபுரம்), நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி)மோனிகா , நாகா்கோவில் மாநகராட்சி மேயா் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், இணை இயக்குநா் (தேசிய சுகாதார இயக்கம்) கிருஷ்ணா லீலா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளா் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





