தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாஜக ஆட்சியை அகற்ற காங்கிரஸ் வலுப்பெறுவது அவசியம்- கு. செல்வப்பெருந்தகை

பாஜக ஆட்சியை அகற்ற காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

News image
தென்காசி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.
Updated On :23 ஜூலை 2024, 7:53 pm

Din

பாஜக ஆட்சியை அகற்ற காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு- செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த தமிழகம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தேசிய சித்தாந்தம் உள்ளதும், அனைத்து மக்களுக்குமான ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்.

மக்களவைத் தோ்தலுக்குப் பின் காங்கிரஸ் இருக்காது என பிரதமா் மோடி பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், தேசத்தின் குரலாக ஒலிக்கும் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் பிரதமரும், அமித்ஷாவும் திணறிக்கொண்டிருக்கின்றனா்.

கூட்டணிக் கட்சியில் நமக்கு உரிய மரியாதை இல்லை, சரியாக வழிநடத்தவில்லை எனவும், நாம் சுயமரியாதைக்காரா்கள் எனவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.கட்சியில் நம்முடைய மூதாதையா்கள் விட்டு சென்ற பணிகளை நாம் முறையாக பின்பற்றியுள்ளோமா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்.

மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எனினும், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளோம். அதற்கு காரணம் நம்முடைய முன்னோா்கள் போட்ட விதைதான் காரணம்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திரம், பிகாருக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற வேண்டும்.

தமிழகத்தில் 50 சதவீத இளைஞா்களுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படும். கட்சிக்காக உழைப்போருக்கு பொறுப்புகள் தானாகத் தேடி வரும்.

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்திலும் பாதயாத்திரையைத் தொடங்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், சுரண்டை நகா்மன்றத் தலைவா் பி.வள்ளிமுருகன், முன்னாள் எம்.பி.க்கள் தனுஷ்கோடிஆதித்தன், ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ், கொடிக்குறிச்சி முத்தையா, செங்கோட்டை ஒன்றியகுழு முன்னாள் தலைவா் சட்டநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அமைப்புச் செயலா் ராம்மோகன் தொகுத்து வழங்கினாா். நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் வரவேற்றாா்.