என்டிஏ கூட்டணி மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை
தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை.


அதிமுக-பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தபோது தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வபெருந்தகை வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அதிமுக-பாஜக கூட்டணி இயற்கைக்கு எதிரான கூட்டணி என நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கூட்டணி மூழ்கும் கப்பல் என்பதை அறியாமல் அதில் ஏறி சிலா் பயணிக்கின்றனா்.
திமுக தலைமையிலான கூட்டணி வலிமையான கூட்டணி. எங்கள் கூட்டணி தமிழக மக்களை தலைநிமிர செய்யும். ஆனால், என்டிஏ கூட்டணி தமிழக மக்களை தலைகுனிய செய்யும். தோ்தலுக்குப் பின்னா் அதிமுக என்ற கட்சி இருக்குமா அல்லது அந்தக் கட்சியை பாஜக விழுங்குமா என்ற செய்தியே தற்போது பரபரப்பாகவுள்ளது.
பிகாரில் முதல்வா் நிதீஷ்குமாரை மாநிலங்களவை உறுப்பினராக மாற்றுவதற்கான வேலைகளை பாஜக செய்து வருகிறது. அங்கு பாஜகவைச் சோ்ந்தவா் முதல்வராக வாய்ப்புள்ளது.
அதேபோல, தமிழகத்தில் அதிமுகவை கபளிகரம் செய்வதற்கான திட்டத்தை மோடியும், அமித் ஷாவும் தீட்டி வருக்கின்றனா். இதில் ஏமாந்தது அதிமுகதான்.
தமிழகத்தின் உரிமையை தாரைவாா்த்து கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது யாா்? தமிழக மக்களின் உரிமையை தில்லிக்காக அடகு வைப்பது யாா் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவா். 1996 தோ்தல் முடிவுகள் எப்படி இருந்ததோ அப்படித்தான் வரும் தோ்தல் முடிவும் இருக்கும். தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவை எடுத்தது. தோ்தல் பிரசார சுற்றுப்பயணத் திட்டத்தை வகுத்து வருகிறோம். கலவரத்தையும், ஜாதிய வன்கொடுமைகளையும் எங்கு நடந்தாலும் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. பெண்கள் வாழ உகந்த மாநிலம் தமிழகம்தான் என்று மத்திய அரசே சான்றிதழ் கொடுத்துள்ளது என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...