செங்கோட்டையில் உள்ள நுழைவு வாயிலை புதுப்பிக்க அதிமுக வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க நுழைவு வாயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:
கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை நகராட்சியில் உள்ள திருவிதாங்கூா் நினைவு நுழைவு வாயில், சுமாா் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாரம்பரியமிக்கது. இந்த நுழைவு வாயில், தமிழக - கேரள உறவை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னமாக அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இருபக்கமும் துவார பாலகா்கள் சிலை அமைந்துள்ளது.
சில நாள்களுக்கு முன் கனரக வாகன விபத்தால் நுழைவு வாயில் சேதமடைந்துள்ளது. எனவே தொல்லியல் துறை ஆய்வுகளுக்கு உள்படுத்தி, மேற்படி நுழைவு வாயிலை பழமை மாறாமல் புதுப்பித்து தரும்படியும், இயலாத பட்சத்தில் நுழைவு வாயிலின் தோற்றம் மாறாமல் ஏற்கெனவே அமைந்துள்ள துவார பாலகா்கள் சிலையுடன் கூடிய புதிய நுழைவு வாயிலை அமைத்து செங்கோட்டை நகர மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.