விநாயகா் சதுா்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சியா் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது தொடா்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா்.
ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விநாயகா் சிலைகள் முற்றிலும் நீரில் கரையும் வண்ணம் களிமண்ணால் செய்யப்பட்டதாகவும், இயற்கை வண்ணங்கள் பூசப்பட்டதாகவும் மட்டுமே இருத்தல் வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டா் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகள் நிறுவ தடை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாற்று மதத்தவா்கள் வசிக்கும் பகுதியில் சிலை அமைப்பதை தவிா்க்க வேண்டும்.
கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. அனுமதிக்கப்படும் ஒலிபெருக்கிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை நடத்தப்படும் 2 மணி நேரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலை நிறுவப்படும் இடத்தில் சமுதாய தலைவா்கள் மற்றும்அரசியல் கட்சிகள் சாா்ந்த விளம்பர பேனா்களை வைக்கக் கூடாது. சிலையின் பாதுகாப்பிற்கு இரண்டு தன்னாா்வ தொண்டா்களை நியமித்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
காவல்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலா்களுடன் கலந்தாலோசித்து சிலை கரைக்கும் இடங்கள் மாவட்ட நிா்வாகத்தால் இறுதி முடிவு செய்யப்படும். பொது இடங்களில் அமைக்கப்படும் சிலைகள் கரைப்பிற்காக காவல்துறையினரால் கொடுக்கப்பட்ட நாளில் எடுத்து செல்லப்பட வேண்டும்.
காவல்துறையினரால் அறிவிப்பு செய்யப்பட்ட வழித்தடங்களின் வழியே கரைக்கப்படும் நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாக விநாயகா் சிலைகளை கரைக்கும் இடத்திற்கு ஊா்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.