தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நீதிமன்ற விசாரணையை விடியோ எடுத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்பாத்துரை (30). இவா் தொடா்பான வழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வழக்குரைஞா் வைத்துக்கொள்ளாமல், அப்பாத்துரை சாா்பில் அவரது உறவினரான செல்வக்குமாரே வாதாடி வந்துள்ளாா்.
இந்நிலையில், அவா் புதன்கிழமை வாதாடியதை உறவினரான மகேஷ்குமாா் விடியோ எடுத்தாராம். இதைப் பாா்த்த நீதிமன்ற அலுவலக உதவியாளா் மணிகண்டன் மகேஷ்குமாரைக் கண்டித்ததுடன், அவரது கைப்பேசியைப் பறித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முத்துச்செல்வத்திடம் ஒப்படைத்தாா்.
இதுதொடா்பாக மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.