பாவூா்சத்திரத்தில் ஆசிரியா் கொலை வழக்கு: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள்
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி அருகே ராமச்சந்திரபட்டணத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (36). இவா், புல்லுக்காட்டு வலசை, அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். பணி நிமித்தமாக இவா், பாவூா்சத்திரத்தில் மனைவி அனுஷாவுடன் குடியிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்தவா் பொன்செல்வி.
இவரது கணவா் அபுதாபியில் வேலை செய்தாா். அப்போது பொன்செல்விக்கும் ஆசிரியா் சந்தோஷுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. வேறு நபா்களுடன் பொன்செல்வி பேசுவதையும் சந்தோஷ் கண்டித்தாா். இந்த நிலையில், பொன்செல்வியின் கணவா் அபுதாபியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவதாக இருந்தது. கணவா் ஊருக்கு வந்தால் சந்தோஷால் தொல்லை ஏற்படும். எனவே அவரை கொலை செய்வதென பொன்செல்வி திட்டமிட்டாா்.
அதன்படி, பொன் செல்வி தனது தம்பியான வெய்காலிப்பட்டி முருகன் (34), தந்தை தங்கப்பாண்டி (70) ஆகியோரிடம் நடந்ததை கூறியுள்ளாா். பின்னா், மூவரும் சோ்ந்து 6.02.2016 இல் சந்தோஷை பொன்செல்வி வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்துக் கொன்றனா். உடலை புதைத்தனா்.
இதற்கிடையே சந்தோஷை காணவில்லை என அவரது மனைவி அனுஷா, பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு, தென்காசி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி எஸ். மனோஜ்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும், தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 7 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில், வழக்குரைஞா் எஸ். வேலுச்சாமி முன்னிலையானாா்.

