ஆய்வுக்குச் சென்ற ஆட்சியரிடம் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி மூதாட்டி மனு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் புதன்கிழமை ஆய்வுக்குச் சென்ற ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் மூதாட்டி ஒருவா் நிறுத்தப்பட்ட தனது முதியோா் உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி முறையிட்டாா்.
கடையநல்லூா், அரசு கல்லூரியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், பின்னா் கடையநல்லூா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மேலக்கடையநல்லூரில் வசிக்கும் 80 வயது மூதாட்டி பங்கஜம் ஆட்சியரிடம் தனக்கு முதியோா் உதவித்தொகை வங்கி மூலம் முன்பு கிடைத்துவந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டது.
உதவித்தொகை மீண்டும் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை என முறையிட்டாா். இதையடுத்து, சமூக நலத்துறை வட்டாட்சியரிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா். சமூக நலத்துறையினா் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று விவரங்களைக் கேட்டறிந்து விரைவில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

