தேர்தலுக்குத் தேர்தல் மாறாத வாக்குறுதி: நெல்லை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவது யார்?

 திருநெல்வேலி, மே 4: வேளாண்மையே பிரதானத் தொழிலாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், விவசாயிகளின் வாழ்வு செழிக்க உதவும் திட்டங்களை நிறைவேற்றுவதில் யார் அக்கறை காட்டப்போகிறார்கள் என்பதே வேளாண் வட்டாரத்தில்
Updated on
2 min read

 திருநெல்வேலி, மே 4: வேளாண்மையே பிரதானத் தொழிலாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், விவசாயிகளின் வாழ்வு செழிக்க உதவும் திட்டங்களை நிறைவேற்றுவதில் யார் அக்கறை காட்டப்போகிறார்கள் என்பதே வேளாண் வட்டாரத்தில் எழும் முக்கிய கேள்வி.

 தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் முடிந்த உடன் காற்றோடு கலந்துவிட்ட விவசாயிகளின் பல கோரிக்கைகளை வழக்கம்போல இந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குறுதியாகக் கூறி வருகின்றனர். அவற்றை நிறைவேற்ற உண்மையான அக்கறை காட்டும் வேட்பாளர்களை விவசாயிகள் வழிமேல் விழி வைத்து வரவேற்க காத்திருக்கிறார்கள்.

 வற்றாத ஜீவநதி தாமிரபரணியும், மாவட்டத்தில் உள்ள 11 அணைக்கட்டுளும் இம் மாவட்டத்தின் வேளாண்மை விருத்திக்கு சாட்சியங்கள். தொழில் வளம் இல்லாத இம் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதானத் தொழில்.

 மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6.82 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 2.32 லட்சம் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. தாமிரபரணி பாசனப் பகுதிகளில் பிரதான பயிராக நெல் 82 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. சிறுதானியங்கள் 15 ஆயிரம் ஹெக்டேரிலும், பயறு வகைகள் 27 ஆயிரம் ஹெக்டேரிலும், பருத்தி 9 ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு 3 ஆயிரம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துகள் 10 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

 தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள் 17 ஆயிரம் ஹெக்டேரிலும், காய்கறிகள் 3,970 ஹெக்டேரிலும், நறுமணப் பொருள்கள் 3,964 ஹெக்டேரிலும், நடவுச் செடி பயிர்கள் 6,304 ஹெக்டேரிலும், பூ வகைகள் 1,610 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

 இவற்றில், ஆலங்குளம், சுரண்டை, கீழப்பாவூர் ஆகிய வட்டாரங்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, பல்லாரி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிகம் விளைகின்றன.

 செங்கோட்டை, தென்காசி வட்டாரங்களில் மாங்காய் அதிகம் விளைகிறது. புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வட்டாரங்களில் எலுமிச்சை அதிகம் விளைகிறது. களக்காடு, நான்குனேரி, வள்ளியூர் வட்டாரங்களில் வாழைப் பயிர் அதிகம் பயிரிடப்படுகிறது. தென்காசி, செங்கோட்டை, கடையம் பகுதிகளில் தென்னை அதிகம்.

 அதிக லாபம் தரக்கூடிய இந்தப் பயிர்களுக்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவ்வப்போது பாதிக்கப்படுவதுண்டு. வழக்கம்போல உற்பத்தி அதிகம் இருக்கும்போது மிக மிக குறைந்த விலைக்கும், விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இப் பகுதி விவசாயிகள் பயன் அடைய முடியாமல் போவதும் ஆண்டுதோறும் நிகழும் அவலமாகும்.

 ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் தக்காளி, பல்லாரி பயிரிடும் விவசாயிகள் சில ஆண்டுகளில் விலை இல்லாமல் அவற்றை ஆடு, மாடுகளுக்கு உணவாக்குவதும், சாலையோரங்களில் கொட்டுவதும் உண்டு.

 இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. காய்கறி அதிகம் விளையும் ஆலங்குளம் பகுதியில் குளிர்பதன சேமிப்பு கிட்டங்கிகளை அமைத்தால், உபரியை சேமித்து வைத்து நல்ல விலைக்கு விற்க முடியும்.

 மாங்காய் அதிகம் விளையும் செங்கோட்டை பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலை அமைக்கலாம். எலுமிச்சை அதிகம் விளையும் புளியங்குடி பகுதியில் அவற்றை சேமித்து வைக்கவும், அதன் சார் பொருள்களைத் தயாரிக்கவும் தொழிற்சாலைகளை அமைக்கலாம். வாழை அதிகம் பயிராகும் களக்காடு பகுதியில் அதிலிருந்து மதிப்பூட்டிய பொருள்களைத் தயாரிக்கும் ஆலையை அமைக்கலாம். இவையெல்லாம் விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்ல, வேளாண்மைத் துறையினரின் பரிந்துரையும் கூட. ஆனால் இவற்றை நிறைவேற்ற யாருக்கும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

 கடந்த காலத் தேர்தல்களில் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவோம் எனக் கூறி வெற்றிபெற்றுச் சென்றவர்கள் பலர். இப்போதும் காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக வேட்பாளர்கள் மீண்டும் அதே பல்லவியைப் பாடி வாக்கு கேட்டு வருகின்றனர்.

 நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது அம்பாசமுத்திரம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. அது தவிர வேறு எந்த ஒரு வேளாண்மை சார்ந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை.

 விவசாயியும், விவசாயமும் செழிக்க உற்பத்திப் பொருளுக்கு சரியான விலை, உள்கட்டமைப்பு வசதிகள், சேமிப்பு கிடங்கு, மதிப்பூட்டிய பொருள்களைத் தயாரிக்க முறையான பயிற்சி ஆகியவை இருந்தால் போதும். இதையே விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதையெல்லாம் நிறைவேற்றி, விவசாயிகளின் தோழனாகப் போவது யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com