சந்திக்க வேண்டிய சவால்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரிக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரிக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன.
தாமிரவருணி பாதுகாப்பு: திருநெல்வேலி மாவட்டத்திலேயே உற்பத்தியாகி அருகமை மாவட்டங்களையும் வளப்படுத்தி, குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் நதியாக இருப்பது தாமிரவருணி மட்டுமே. இந்நதியின் பாசனப் பரப்பு 86 ஆயிரம் ஏக்கர். 60 லட்சம் மக்களின் தாகத்தைத் தணிக்கிறது.
தாமிரவருணி கரையோரம் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம். கழிவுகள் கலக்கும் கேந்திரமாகவும் விளங்குகிறது. தாமிரவருணியை மறுமதீப்பீடு செய்து அதன் பரப்பும், வளமும் கடுகளவும் குன்றாமல் காப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். பாசனம், குடிநீர்த் தேவையைத் தவிர்த்து வேறு பயன்பாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
தாதுமணல் கொள்ளை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் உள்ள கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. இவற்றை சுரண்டி தனியார் ஆலைகள் நடத்திய முறைகேடுகளால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தாது மணல் வர்த்தகத்துக்கு தடை விதித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சத்திய பிரதா சாகு ஐஏஎஸ் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிட்டு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தச் சூழலில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரிக்கு தாதுமணல் விவகாரம் தலையாய சவாலாகவே அமையும்.
மணல் கொள்ளை: திருநெல்வேலி மாவட்டத்தில் 11 அணைக் கட்டுகள், 2,400 குளங்கள், 100-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் உள்ளன. இவை தவிர தாமிரவருணியின் கிளைகளாக செல்லும் ஆற்றுப் படுகைகளும் ஏராளம். இவற்றில் மணல் கொள்ளை என்பது வாடிக்கையாக உள்ளது. மணல் கொள்ளையைத் தடுத்து நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது இந்த மாவட்டத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாகும்.
சாதி மோதல்: சாதிய மோதல்களும், சாதிய ஆதிக்கமும் தொடக்கப் பள்ளி தொடங்கி, மரணத்துக்குப் பிறகு செல்லும் மயானம் வரைக்கும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இந்த மோதலால் அவ்வப்போது உயிர்ப் பலியும், இளம் பருவத்திலேயே பல்வேறு குற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதவையாக உள்ளது. சாதி மோதலற்ற சமூகத்தை உருவாக்குவதும் சவாலாக அமைந்துள்ளது.
இவை தவிர பல்வேறு நிலைகளில் சிறிய அளவிலான சவால்கள் இருந்தாலும் பிரதான சவால்களை சமாளித்து சந்தீப் நந்தூரி சாதிக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com