கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) எரிவாயு கிடங்கு, செளத் இந்தியா பாட்டிலிங், ஏடிசி டயர், நோவா கார்பன், குளோப் ரேடியோ போன்ற பெரிய தொழிற்சாலைகளும், சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், சிப்காட் வளாகத்தில் புதிதாக தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு துறைகளின் அனுமதி கோரி, ஏராளமான நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கெமிக்கல் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகளும் இங்கு அமையவுள்ளன. ஆனால் சிப்காட் வளாகத்தில் இதுவரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.
கோடிக்கணக்கில் இழப்பு: கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தீ விபத்து ஏற்படுகிறபோது, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, ஆலங்குளம், நான்குனேரி, கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) ஆகிய பகுதிகளில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டை- சிப்காட் இடையிலான தொலைவு 17 கி.மீ., கோவில்பட்டி-சிப்காட் இடையிலான தொலைவு 35 கி.மீ., ஆலங்குளம்- கோவில்பட்டி இடையிலான தொலைவு 45 கி.மீ., சேரன்மகாதேவி-சிப்காட் இடையிலான தொலைவு 45 கி.மீ., நான்குனேரி-சிப்காட் இடையிலான தொலைவு 48 கி.மீ. ஆகும்.
பொதுவாக, தீ விபத்து ஏற்படும் இடத்தை 10 நிமிஷத்துக்குள் அடையும் வகையில் தீயணைப்பு நிலையம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்துக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து செல்வதற்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 நிமிஷம் வரை ஆகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் சிப்காட் வளாகத்தை சென்றடைவதற்குள் தீ பெரிய அளிவில் பரவி விடுகிறது. சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் இதுவரை உயிரிழப்பு ஏதும் கிடையாது. ஆனால் தீ விபத்தால் அங்குள்ள தொழிற்சாலைகள் கோடிக்கணக்கில் இழப்பை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
அதிநவீன உபகரணங்கள்: மேலும் ஆண்டுதோறும் சிப்காட் வளாகத்தில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவதாக தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர். இந்த ஆண்டு சிப்காட் வளாகத்தில் உள்ள ஏடிசி டயர் தொழிற்சாலை, தனியார் குளிர்பான தொழிற்சாலை போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல் சிப்காட் வளாகத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த 2015-இல் தீ விபத்து ஏற்பட்டது. பெரிய தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படுகிறபோது, அதிநவீன உபகரணங்கள் மற்றும் நுரை (ஃபோம்) மூலம் தீயணைப்பது உள்ளிட்ட வசதிகள் அவசியமாகும். ஆனால் இன்றளவிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் நுரை தீயணைப்பான் வசதி கிடையாது. மதுரையில்தான் நுரை தீயணைப்பான் வசதி உள்ளது. மதுரைக்கும், சிப்காட்டுக்குமான தொலைவு 140 கி.மீ. ஆகும்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு நுரை தீயணைப்பான் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அறிவிப்போடு நின்று போனது. இன்று வரை வழங்கப்படவில்லை. தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படுகிறபோது, தண்ணீர் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கும் தீ தடுப்பு உபகரணங்களைக் கொண்டே தீயை அணைத்து வருகிறோம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட கிராமங்கள்: மேலும் கங்கைகொண்டான் சுற்று வட்டாரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், உரிய நேரத்திற்கு சென்றடைய முடியவில்லை. கங்கைகொண்டான் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், நீண்ட தூரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டியிருப்பதால், மீட்புப் பணி தாமதமாகிறது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நாளுக்குநாள் தொழிற்சாலைகள் பெருகிவரும் நிலையில், அங்கு நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
"புதிய தீயணைப்பு நிலையத்துக்கு பரிந்துரை'
இது தொடர்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு கூறியது: சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. புதிய தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பமும் செய்துள்ளனர். எனவே அங்கு தீயணைப்பு நிலையம் அவசியம்தான். இரண்டு வாகனங்களுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்கக் கோரி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...