சுகாதாரப் பணிகளில் மெத்தனம்: தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக நடைபெறும் துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ததில் தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து


திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக நடைபெறும் துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ததில் தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரை 3 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை உள்ளடக்கி தினமும் அதிகாலையில் வீடு, வீடாகவும், புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறும் இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் ஆய்வு செய்து சுகாதாரக் குறைவான வீடுகளுக்கு அறிவுரையும், தனியார் கடைகளுக்கும் எச்சரிக்கையும் அளித்து வருகிறார்.
இந்நிலையில், திருநெல்வேலி சங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பங்கேற்று வீடு, வீடாகச் சென்று அங்கிருந்த டிரம்கள், குடிநீர்த் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி அமைந்துள்ள இடங்களைப் பார்வையிட்டார். மேலும், கொசு ஒழிப்பு களப்பணியாளர்களை தவறாமல் புகைமருந்து அடிக்கவும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கவும் உத்தரவிட்டார்.
சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியை ஆய்வு செய்ததில் 3 இடங்களில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணிகளில் மெத்தனமாக இருந்ததாக அப்பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்க பேரூராட்சிக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரத்துறை மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின், வட்டாட்சியர் கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
ரூ.1 லட்சம் வரை அபராதம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மெகா துப்புரவுப் பணிகளின்போது வீடுகள், கட்டடங்களில் டெங்கு கொசு உற்பத்திக்கான புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் கூறியது:
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் கடந்த இரு வாரமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கொசுப் புழு கண்டறியப்படும் வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு உள்ளாட்சிகளின் தன்மைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இப்போது, தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 500 பேரிடம் அபராதம் விதிக்க விளக்கம் கேட்கப் பெற்றுள்ளது. அபராதத் தொகையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே முடிவு செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...