சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ரத்த தானம் செய்வதால் மாரடைப்புக்கான அபாயம் குறையும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

ரத்த தானம் செய்வதன் மூலம் புதிய ரத்த அணுக்கள் உருவாக உடல் ஊக்கப்படுத்தப்படுவதால் மாரடைப்புக்கான அபாயம் குறையும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:38 am

ரத்த தானம் செய்வதன் மூலம் புதிய ரத்த அணுக்கள் உருவாக உடல் ஊக்கப்படுத்தப்படுவதால் மாரடைப்புக்கான அபாயம் குறையும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை, ஸ்பீடு ரத்த தான சேவை கழகம் ஆகியவை சார்பில் உலக ஆரோக்கிய தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு மற்றும் குருதி கொடையாளர் சேர்க்கை முகாமில் பொதுமக்களிடம் கூறியது: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நிகழும் பல்வேறு விபத்துகளில் சிக்கி காயமடைவோர் ரத்த இழப்புக்கு ஆளாகிறார்கள். மகப்பேறு முதல் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்கும் நோயாளிகளுக்கு கூடுதலாக ரத்தம் தயார் நிலையில் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், ரத்த சோகை அதிகம் உள்ளவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக ரத்தம் தேவைப்படுகிறது.
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 18 முதல் 65 வயது வரை உள்ள ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம். ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின்போது 350 மில்லி லிட்டர் மட்டுமே எடுக்கப்படும். இந்த ரத்தம் 24 மணி நேரத்திற்குள் நமது உடலால் ஈடுசெய்யப்படும். ரத்த தானம் செய்ய ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். உடல்தகுதி உடையவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானமளிக்க 20 நிமிடங்களே போதுமானது. தானத்திற்கு பின்பு வழக்கம்போல் அன்றாட வேலைகளை செய்யலாம்.
ரத்த தானம் செய்வதன் மூலம் புதிய ரத்த அணுக்கள் உருவாக உடல் ஊக்கப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் உடலில் 500 கலோரிக்கும் மேலாக எரிக்கப்படுவதால் மாரடைப்பு வருவதற்கான அபாயம் குறைக்கப்படுகிறது. இப்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கிடைக்கும் ரத்தக் கொடை குறையும் வாய்ப்புள்ளதால் இளைஞர்கள், பொதுமக்கள் ரத்த தானத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில் ஸ்பீடு ரத்த தான சேவை கழகச் செயலர் பாதுஷா வரவேற்றார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் மருத்துவர் எம்.சார்லஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் மருத்துவர் பிரேமச்சந்திரன், அஷெரப் அலி, ஹபீப், சித்திக், பைசல் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் இருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.