விளைபொருள் மதிப்புக் கூட்டு இயந்திர மையம் அமைக்க மானியம்: ஆட்சியர் தகவல்

வேளாண் விளை பொருள் மதிப்புக் கூட்டு இயந்திர மையங்கள் அமைக்கும் உழவர் உற்பத்திக் குழுக்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. 
Updated on
1 min read

வேளாண் விளை பொருள் மதிப்புக் கூட்டு இயந்திர மையங்கள் அமைக்கும் உழவர் உற்பத்திக் குழுக்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானாவாரி நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்க, நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் 2016-17 நிதியாண்டில் முதற்கட்டமாக ஒரு தொகுப்புக்கு 1000 ஹெக்டேர் வீதம் 5 மானாவாரி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு 5,000 ஹெக்டேர் மானாவாரி நிலத்தில் ரூ.2.15 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் செயலாக்கப்பட்டுள்ளன.
தற்போது, வேளாண் விளை பொருள்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் வாங்குதல்,  அதற்குரிய பணி மூலதனம்  உள்ளிட்டவைக்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ. 10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படவுள்ளது. மீதி 25 சதவீத தொகையை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக் குழு செலுத்த வேண்டும். 
மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை நிறுவுவதற்கான இடவசதி, மின் இணைப்புஅவசியம். அரசு கட்டடத்தில் இட வசதியிருந்தால், வாடகை  செலுத்தி மையம் அமைத்துக்கொள்ளலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பெரிய அளவிலான மதிப்பு கூட்டும் இயந்திர மையங்களை ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாகவும் அமைக்கலாம். வேளாண் பொறியியல் துறையினால் விலை நிர்ணயம் செய்து அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.  பின்னர், ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் அளித்து, இயந்திரங்கள் வழங்கிட உத்தரவிடப்படும். 
பின்னர்,  உதவி செயற்பொறியாளர் மூலம் அதன் ஆய்வறிக்கையைப் பெற்று, தொகுப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம் மானியத் தொகை விடுவிக்கப்படும்.
 இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுடையோர் தங்கள் விண்ணப்பத்தை தொகுப்பு மேம்பாட்டு குழுவிற்கு அளிக்கலாம்.   மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர்,  திருநெல்வேலி மற்றும் தென்காசி  உதவிச் செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com