நிகழாண்டு 74 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு உள்பட 11 அணைகளில் 9055.23 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆகவே, பிசான பருவ சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு, நம்பியாறு, வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய 11 அணைகள் உள்ளன. இந்த அணைகளின் நீர்இருப்பு மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடியாகும்.
தாமிரவருணி பாசனத்தில் ஆண்டுக்கு சராசரியாக 1084 மில்லி மீட்டர் மழை கிடைத்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் பருவமழை குறைந்ததால் இப்பாசனத்தில் நீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இப்பாசனத்தில் சராசரியாக ஆண்டுக்கு 814.80 மில்லி மீட்டர் மழைதான் பெய்து வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சராசரியைவிட மழை குறைவாக பெய்ததால் அணைகள் முழு அளவில் நிரம்பவில்லை. பாசனத்துக்கும் முழுமையாக நீரை பங்கிட முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் நிகழாண்டு செங்கோட்டை, பாபநாசம் அணை, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு அணை, தென்காசியில் அதிகபட்சமாக மழை கிடைத்துள்ளது. பாபநாசம் அணையில் 441 மி.மீ. பெய்ததால் பாபநாசம், சேர்வலாறு அணைகளும், செங்கோட்டையில் 563 மி.மீ. மழை பெய்ததால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின.
ஆகஸ்ட் மாதம் சராசரி மழையளவு 23.30 மி.மீ. ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 137.76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்சம். இதனால் 11 அணைகளில் 9 அணைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் திறக்கப்பட்டது.
அணைகளில் நீர் இருப்பு
(மில்லியன் கனஅடியில்) : பாபநாசம் அணை-4881, சேர்வலாறு அணை-673.40, மணிமுத்தாறு அணை-2613.28, கடனாநதி அணை-294.92, ராமநதி அணை-91.70, கருப்பாநதி அணை-103.03, குண்டாறு அணை-18.43, வடக்குப் பச்சையாறு அணை- 63.75, நம்பியாறு அணை-57.16, கொடுமுடியாறு அணை-99.34, அடவிநயினார் அணை-159.22.
இம்மாவட்டத்திலுள்ள 11 அணைகளில் மொத்தம் 9055.23 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் கூடுதலாகும்.
விவசாயிகள் நம்பிக்கை:
கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவத்தில் போதிய மழை இல்லாததால் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடித்தது. அணைகளிலும் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலில் பிசான பருவ சாகுபடிக்கு சரியான தருணத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருந்து வந்தது.
நிகழாண்டு கூடுதலாக பெய்த மழையால், தற்போது அணைகளில் 9055 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. எனவே, வரும் நவம்பர் மாதம் பிசான பருவ சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கடந்த 18 ஆண்டுகளில் 2006, 2008, 2011, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சராசரியான மழை அளவைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. நிகழாண்டு தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் 518.56 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இது இயல்பான மழை அளவைவிட 74 சதவீதம் கூடுதலாகும். வழக்கமாக வடகிழக்குப் பருவத்தில் அதிகளவில் மழை பெய்வதுண்டு. ஆகவே, வரும் நவம்பரில் தொடங்கும் வடகிழக்குப் பருவத்தில் கூடுதலாக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவான மழை
ஆண்டு மி.மீ.
2001 765.40
2002 816.83
2003 900.37
2004 994.48
2005 971.49
2006 1183.62
2007 920.54
2008 1339.76
2009 985.93
2010 873.69
2011 971.69
2012 768.87
2013 913.86
2014 1343.25
2015 1473.38
2016 396.95
2017 1090.93
நிகழாண்டு (2018-ஆக. 31 வரை) 518.56 மி.மீ. மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குமாரராணி மீனா முத்தையா காலமானார்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தேரோட்டம்!

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

