திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு நடைபெற்றது. இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
தைப்பூச நாளான கடந்த 21ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலிலிருந்து எஸ்.என்.நெடுஞ்சாலை, கீழ்ப்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதிக் கரையோரமுள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்புத் தீபாராதனைக்குப் பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து, தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக வெளித்தெப்பம் அருகேயுள்ள மண்டபத்துக்கு மலர் அலங்காரத்துடன் வந்த நெல்லையப்பர்-காந்திமதியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு, சுவாமி-அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் வலம்வர போதுமான தண்ணீர் இல்லாததால் நிலையான தெப்பத்தில் சிறப்பு தீபாராதனைகள் மட்டும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா குறித்து சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவன் உள்ளார். பஞ்சபூதங்களில் ஒன்றான நீரும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை மக்களுக்கு வெளிப்படுத்துவதே தெப்பத்திருவிழா.
தெப்பத்திருவிழா நாளில் மட்டும்தான் இறைவனின் தலைமுடியை பக்தர்கள் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 9 சுற்றுகள் வலம் வரும் தெப்பத்தில் அமர்ந்து முதல் சுற்றின்போது வேதமந்திரங்களும், 2ஆவது சுற்றில் தேவாரமும், 3ஆவது சுற்றில் நாகசுரமும் இசைக்கப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு சுற்றிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். இறுதிச் சுற்றின்போது கப்பல் வாத்தியம் எனப்படும் இசை முழங்க சுவாமியின் தெப்ப உற்சவம் நிறைவடையும் என்றார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா. ரோஷினி, கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


