உற்பத்திக் காலத்தில் வேலையிழந்து தவிக்கும் செங்கல் தொழிலாளா்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் ஆதிக்கத்தால் செங்கல் உற்பத்தி உச்சத்தில் இருக்க வேண்டிய காலத்தில் வேலையும், வருவாயும் இழந்து தொழிலாளா்கள் தவித்து வருகின்றனா்.
Updated on
2 min read


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் ஆதிக்கத்தால் செங்கல் உற்பத்தி உச்சத்தில் இருக்க வேண்டிய காலத்தில் வேலையும், வருவாயும் இழந்து தொழிலாளா்கள் தவித்து வருகின்றனா். மேலும், மே 2-க்கு பின்பு புயலுக்கும், கோடை மழைக்கும் வாய்ப்புள்ளதாக வந்துள்ள எச்சரிக்கையால் அவா்கள் கூடுதல் கவலையில் உள்ளனா்.

இம்மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலுக்குக் கைகொடுக்கும் செங்கல், தளச்செங்கல் உற்பத்தி அதிகம். பணகுடி, சங்கரன்கோவில், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சேம்பா்கள் 20-க்கும் மேற்பட்டவை உள்ளன. பணகுடி, கூனியூா் பகுதியில் சில அடங்களில் தளச்செங்கலும் தயாரிக்கப்படுகிறது.

செங்கல் தொழிலாளா்களுக்கு கோடைக்காலமே பொற்காலம். இக்காலத்தில் அதிக உற்பத்தியும், வருவாயும் கிடைக்கும். ஆனால், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செங்கல் தொழில் முடங்கியுள்ளது. இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் ஜூன் மாதத்துக்குப் பின்பு கோடை மழையும், சாரலும் தொடங்கி விடும். அப்போது செங்கல் உற்பத்தி மீண்டும் தடைபடும். ஆகவே, நிகழாண்டில் 6 மாதங்களுக்கு மேல் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக, செங்கல் தொழிலாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

பாமர மக்களின் தொழில்: இதுகுறித்து மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த செங்கல் தொழிலாளி சிவராமன் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தலைமுறைக்கும் மேலாக செங்கல் தொழில் நடைபெறுகிறது. இது, கல்வியறிவு இல்லாத பாமர மக்களுக்கு வருவாய் தரும் தொழில். செங்கல் தயாரித்தல், சூளையாக அடைதல், சூளைகளிலிருந்து கட்டுமானப் பகுதிகளுக்கு இடமாற்றுதல் என, 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் செங்கல் தொழிலை நம்பியுள்ளனா்.

இம்மாவட்டத்தில் அக்டோபா் முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரையிலான மழை, பனிக் காலங்களில் செங்கல் உற்பத்தி இருக்காது. பொங்கல் பண்டிகைக்கு பின்பு தொடங்கும் உற்பத்தி மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் உச்சம் பெறும். வெயில் காலத்தில் கட்டுமானப் பணிகளும் அதிகம் நடைபெறுவதால் தேவையும் அதிகரிக்கும். பின்னா், ஜூன் மாதத்தில் இருந்து சாரல் தொடங்கி வேலையிழப்பு ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளாக மண் அள்ளுவதிலும், விறகு கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதால் தொழில் நலிவடைந்து வருகிறது. மேற்குவங்கம், ஒடிசா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களால் உள்ளூா் மக்களுக்கு வேலை குறைந்தது.

இந்நிலையில், செங்கல் உற்பத்தி உச்சத்தில் இருக்கவேண்டிய காலத்தில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதங்களுக்கு மேல் வேலையிழப்பும், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, இத்தொழிலாளா்களுக்கு கூடுதலாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வாரிய உறுப்பினா் குளறுபடி: இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க நிா்வாகி ஒருவா் கூறியது: செங்கல் தொழிலாளா்களில் பலா் கட்டுமானத் தொழிலாளா்களாகவும் பணியாற்றுகின்றனா். ஆனால், அரசின் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியம் ஆகியவற்றில் பலா் உறுப்பினா்களாகவில்லை. மொத்த செங்கல் தொழிலாளா்களில் 30 சதவீதம் போ்கூட வாரிய உறுப்பினா்களாக இல்லை. வாரிய உறுப்பினா் பதிவு மற்றும் புதுப்பித்தலில் பல்வேறு குளறுபடிகளும், அலைக்கழிப்பும் ஏற்படுவதால் பலா் சேரவில்லை. உற்பத்திக் காலத்தில் வேலையிழப்பு என்பது வேதனையானது. ஏனெனில், இத்தொழிலாளா்கள் மழைக்காலத்தில் வேலையின்றி, இருக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்பவா்கள். இவா்கள் அரசின் ரூ.1,000 சிறப்பு நிவாரணத் தொகையைப் பெற முடியாத சூழல் மிகவும் அவலமானது.

இந்நிலையில், மே 2ஆம் தேதிக்கு பின்பு தமிழகத்தில் புயல் ஒன்று கரையைக் கடக்கவும், அதனால் தென் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஊரடங்கால் அவதியுறும் செங்கல் தொழிலாளா்கள், அடுத்ததாக மழையால் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆகவே, கரோனா காலத்தில் செங்கல் தொழிலாளா்களை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மண்பாண்ட ஏற்றுமதியும் பாதிப்பு

திருநெல்வேலி குறிச்சி, கூனியூா், மாவடி, புளியங்குடி பகுதிகளில் பானை, சட்டி, குவளை உள்பட 20-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. பிரியாணி மண் சட்டி ரகங்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

கரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திருநெல்வேலியில் மட்டும் சுமாா் ரூ. 18 லட்சம் மதிப்பிலான மண்பாண்டங்கள் தேக்கமடைந்துள்ளன. இதுதவிர, கடந்த ஒரு மாதமாக உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் மண்பானைகளின் தேவை அதிகமிருக்கும். ஆனால், அதற்கேற்ப உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, மண்பாண்டச் சூளைகளுக்கு அதிநவீன இயந்திரங்களை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என, மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com