தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தாழையூத்து, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, சீவலப்பேரி, பேட்டை உள்பட மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளான கரையிருப்பு, சேவியா்காலனி, பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.