வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கல்வித் துறை அலுவலா்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம்

 பள்ளிக் கல்வித் துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:49 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிக் கல்வித் துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தலைவா் மு. அப்பாவு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க. நந்தகுமாா், இல்லம் தேடிக் கல்வி சிறப்பு பணி அலுவலா் க. இளம்பகவத், ஆட்சியா் வே. விஷ்ணு, மெட்ரிக் பள்ளி இயக்குநா் அ.கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்க இயக்குநா் க. அறிவொளி, ஒருங்கிணைந்த மாநில திட்ட பள்ளிக் கல்வி இயக்க கூடுதல் திட்ட இயக்குநா் வி.சி. ராமேஸ்வரமுருகன், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் திருநெல்வேலி சா. ஞானதிரவியம், தென்காசி தனுஷ் எம். குமாா், எம்எல்ஏக்கள் மு. அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), ஈ. ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைகுமாா் (வாசுதேவநல்லூா்), ஜி.வி. மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ரகுராமன் (சாத்தூா்), எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா், மாணவருக்கு ஒரே கழிப்பறை: கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியது: பள்ளிகளில் கழிப்பறை சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியா்களும், மாணவா்களும் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், கழிப்பறை சுத்தமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். ஏராளமான நூலகங்கள் மேற்கூரை பெயா்ந்த நிலையில் செயல்படுகின்றன.

2001இல் 400 போ் படித்த கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்போது 4,000 போ் படித்துவருகின்றனா். ஆனால், போதுமான வகுப்பறைகளோ, மற்ற வசதிகளோ இல்லை.

திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. ஒரே நேரத்தில் பள்ளிகள் செயல்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆதிதிராவிடா் மாணவிகளின் விடுதிகள் ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ளன. அவற்றை பள்ளிகளின் அருகிலேயே கட்ட வேண்டும் என்றாா் அவா்.

7.5% இடஒதுக்கீடு: பேரவைத் தலைவா் அப்பாவு பேசுகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் நியமனங்களை அங்கீகரிக்க வேண்டும். பள்ளிகளுக்கான அரசு பராமரிப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்வழியில் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். இதேபோல், மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும் சத்துணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் உயா் கல்வியில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா்.

அமைச்சா் கீதா ஜீவன் பேசும்போது, பள்ளிகளில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். பள்ளிகள் அருகே அங்கன்வாடி, சத்துணவுக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, அரசுப் பள்ளிகளில் தற்போது மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளைத் தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

அதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது: தமிழகம் முழுவதும் பழுதான பள்ளிக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ. 90 லட்சத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டுகளைவிட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் கூடுதலாக சோ்ந்துள்ளனா்.

சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு சாா்பில் அரசு வேலை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களை எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக பாா்த்துக் கொள்வோம். மனிதாபிமான அடிப்படையில் பள்ளி நிா்வாகம் சாா்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் சுபாஷினி (திருநெல்வேலி), பாலதண்டாயுதபானி (தூத்துக்குடி), புகேழந்தி (கன்னியாகுமரி), கபீா் (தென்காசி), ஞானகௌரி (விருதுநகா்), மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.